Friday, 21 September 2018

கலைஞருக்கோர் கவிதாஞ்சலி

கலைஞருக்கோர் கவிதாஞ்சலி:
********************
திருக்குவளை தந்த தீராச் சுடரே
கருவறையில் கன்னித்மிழ் கற்றே வந்தாயோ?
கழகச் சூரியனே காந்தத் தமிழே!
பழந்தமிழ் காத்த பண்பட்ட் பாவலரே!

வேதம் நிறைந்த வீரநாட்டில் நிந்தன்
பாதம் பார்த்துப் பழகி வந்தோம்!
செம்மொழி கண்ட செம்மாந்ததமிழே!
எம்மொழியும் நீயே ஏகாந்தத் தலைவரே!

பரணி கண்ட பைந்தமிழ்ப் புலவரே!
தரணியில் தமிழைத் தங்கமாக உயர்த்திட்டாய்!
திரையும் வணங்க திசையெட்டும் ஒலிக்க
கரைபுரளும் காவிரியிய் காவியமும் தந்திட்டாய்!

அஞ்சுகத்தாய் பெற்ற அஞ்சா நெஞ்சே!
நெஞ்சுக்கு நீதியாய்நின்ற நிகரிலாத் தலைவரே!
தொல்காப்பியப் பூங்காவும் தொன்தமிழ் உரைக்கும்!
நல்லுரை வள்ளுவம் நற்றமிழ் காத்திடும்!

குறளோவியம் தந்தாய் குமரிக்கோட்டமும் தந்தாய்!
மறவழித் தமிழா மறைந்தே போனாயோ?
சமத்துவபுரம் தந்த சமத்துவக் கோமானே!
எமனும் உம்மை ஏமாற்றிச் சென்றானோ?

பட்டிதொட்டி யெல்லாம் பவளத் தமிழால்
கட்டிப் போட்டீர் கழகச் சிங்கங்களை
பார்புகழும் பைந்தமிழ்ப் பகலவனும் நீயே!
கார்மேகமாய் விண்ணில்    கரைந்து சென்றாயோ?

எத்திக்கும் உன்தமிழால் ஏகமாய் நிறைந்தாய் !
முத்தமிழ் வித்தகனே மூழ்கியே விட்டாயோ?
கலங்கரை விளக்கமாய் காலமும் காத்தாய்!
கலங்கி நிற்கிறோம் கனத்த இதயத்துடன்!

வங்கக் கடலோரம் வாஞ்சையுடன் நீயுறங்க"
பொங்கு தமிழும் புலம்பித் தீர்க்குதய்யா!
தன்னே ரில்லாத் தமிழினத் தலைவா!
இன்றே வாராயோ? இன்தமிழ் தாராயோ?

தமிழாய் மீள்வாய் தரணி ஆள்வாய்!
அமிழ்தே அழகே ஆழ்கடலே அமைதி கொள்வாய்!.

         காரைக்குடி கிருஷ்ணா

அழகிய அசுரி அழகிய அசுரி
என் மனதுக்குள் நீயே அசரீரி

சுட்டுவிடும் மொட்டவிழும் வெட்கம் உனக்குமட்டும் எப்படி

உன்குறும்பும் குதூகலமும்
என் குற்றுயிருக்குள் ஜீவநதி/

கன்னல்களின் தித்திப்பில்
தொட்டுச்செய்த கன்னங்களில் கண்டேனடி
பிரம்மனின் கைவண்ணமும் கள்ளத்தனமும்/

மாநிற தேகமும்
மயக்கும் மான்விழியும்
ரசிக்கையில் உணர்ந்தேனே

இத்தனை நாள் எங்கிருந்தாய்
இன்பத்தேனே,நல்லுறவே
நட்பில் இல்லை நப்பாசை
மொத்தமாய் தித்திக்கும் உலகஅழகியே உன் பொய்களும் இனித்ததுவே.
குரல்வளமோ கருக்கருவா
சுருக்கென்று அறுக்கும் செவியில் கேட்டால் இரத்தநாளங்களில்.
பரவும் பரவசத்தின் பாசக்காரியே,,
உன்முகம் கண்டநொடி
பார்த்ததுபோலவும்
பழகிய உணர்வும் தோன்றியதே எவ்வாறோ/

ஆராய்ந்து அறிந்தேன்
உன்குரல்கள் வரைந்திட்ட
புகைப்படம் என்நெஞ்சுக்குள்ளும் இவ்வாறே இருக்கிறதே
அதனாலோ என்னவோ
கண்டதாய் ஞாபகம்.

பேருக்கேற்ற பேரழகியே
உன் கன்னத்திலொரு
கரும்புள்ளியாய் நானும் இருக்கிறேன் உணர்ந்தாயோ//

கண்ணாடிமுன் காணாமல்
கண்மூடி பார்
கவிதையோடு தெரிந்திடுவேன்

Tuesday, 18 September 2018

நீ..தானே
$$$$$$$$$

நீ..தானே....
என்னுள் வாழும் உயிரே!
நீ...தா...னே....
என்னுள் வளரும் காதல் தீயே!
நீ...தானே...
என்றென்றுன் என் கனவில்!
நீ..தா..னே...நினைவுகள் தந்த உறவில்..உறவில்!

காதலினால்...காதலினால்
கரைந்து போகுது மனதே..மனதே..!
ஆதலினால்..ஆதலினால்
உயிரில் கலந்து உருகுது உணர்வே!

உன்மூச்சு சுவாசம்தான்
என்னோடு பேசும் பேசும்!
உன்வேர்வை வாசம்தான்
என்னோடு வாழும்..வாழும்!

வான்மேகம் தாலாட்ட
விழிமூடிடுவேனே உன் நெஞ்சில்!
விழியிரண்டும் திறந்திட
கனவுகள் தொடர்ந்திட
கலைந்திடுமோ...வளர்ந்திடுமோ?

நீ..தானே..என்னுள் வாழும் உயிரே..உயிரே...
நீ...தா...னே...என்னுள்
வளரும் காதல் தீயே..தீயே....!
நீ..தானே என்றென்றும் என் கனவில்...கனவில்....
நீ..தா..னே....நினைவுகள் தந்த உறவில்...உறவில்!!

Saturday, 8 September 2018

கலைஞருக்கு இரங்கற் பா

காவியத்தலைவனுக்கு இரங்கற் பா
***************************************
திருவாரூர் திருமகனே!
கலைமகளின் தலைமகனே!
கழகச் சூரியனே !
காந்தத் தமிழே!
காவியத் தாயின்
ஓவியமும் நீயே!

செம்மொழி காத்த
செம்மாந்த தமிழே!
எம்மொழியும் நீயே!
தமிழினத் தலைவனே!

தமிழை நீ எழுதியதால்
தகர வார்த்தையும்
தங்கமானது!
தமிழனாக நீ பிறந்தாய்!
தரணியில் தமிழனை
உயர்த்தி விட்டாய்!

தமிழ்மொழி உன்நாவினில்
நாதமாய் நடமாடியது!
கரைபுரளும் காவிரியாய்
காவியமும் தந்திட்டாய்!

ஓயாத தமிழே!
நீ ஓய்வெடுக்கச் சென்றாயோ!
மண்ணுலகில் மணித்தமிழ்
சமைத்த நீ
விண்ணுலகப் பணி
செய்யச் சென்றாயோ!

உதயசூரியன் உனது சின்னம்
கலைச்சூரியனும் நீதானே!
முத்தமிழ் படைத்த நீ
மூழ்கி விட்டாயோ!

மீளாத் துயரில்
எமை ஆழ்த்தி
மோகனத் தமிழ் படைக்க
மேலுலகம் சென்றாயோ!

தமிழாய் மீண்டுவருவாய்!
தமிழால் தரணியில்
ஆட்சி செய்வாய்!
என்றே நாங்களெல்லாம்
அமைதி கொண்டோம்!
ஆழ்கடலே அமைதி
கொள்வாய்.!
     காரைக்குடி கிருஷ்ணா

Tuesday, 28 August 2018

வீணையடி நீயெனக்கு

வீணையடி நீயெனக்கு:
*********************-****
பாவகை: கலித்தாழிசை :
**************************
கண்ணின் ஒளியே
காட்சியும் நீயே!
விண்ணின் நிலவே
விந்தைப் பெண்ணே

துன்பம் நீக்கும்
தூயவளே எந்தன்
இன்பமும் நீயே!
இதயமும் நீயடி!

காற்றின் கீதமே
கானக மயிலே
ஏற்றமும் நீயடி!
என்னுயிரும் நீய்டி!

எந்தன் விழியே
இசைக்கும் குயிலே
மந்திரச் சொல்லே!
மனதின் ஒலியே!

நாதமாய் என்னுள்
நர்த்தனம் செய்கின்றாய்
வேதமாய் நின்றே
வினைபல புரிகின்றாய்

உடலுள் உயிராய்
உறைந்தே கிடக்கின்றாய்
திடமாய் நெஞ்சில்
நிறைந்தே இருக்கின்றாய்

வஞ்சியே வண்டமிழ்ப்
பாவையே வரமே
தஞ்சமே என்றன்
தரணியும் நீயே

சிறுநெருஞ்சிப் பூவே
சித்திரச் சிலையே!
வறுமை அறியா
வஞ்சித் தமிழே!

வாழ்வாங்கு வாழவே
வான்மழையாய் வந்தவளே!
வாழ்த்துமடி நம்மை
வானகமும் வையகமும் என்றுமே.

       காரைக்குடி கிருஷ்ணா

மண்மகள் காப்போம்

மண்மகளே அழகே
மண்ணுயிர் காக்கும்
விண்ணரசியே எங்கள்
வித்தே உயிரே
உன்னைக்
காக்க
வில்லை என்றால்
மனிதமும் இங்கே
மறித்து விடுமே.

          காரைக்குடி கிருஷ்ணா

Wednesday, 8 August 2018

முத்துவின் கவீதை

தனிமையான
என் பயணங்கள்...!

பாலைவனமாம் என் மனதில்
பருவமழை போல்
பெய்தாய் நீ....!!

தனிமையில்
நடந்த எனக்கு
நட்புக்கரம் தந்து
நிழல் போல் துணையானாய்....!!

உன் சந்தோஷங்களை
எனக்கு பரிசளித்து விட்டு
என் கவலைகளை நீ
களவாடிச் செல்கிறாய்....!!

சின்னதாய் இப்போது ஒரு
சிறகு முளைத்ததாய் உணர்வு...!
உன் நட்பு கிடைத்தபின்
உயரத்தில் பறக்கிறேன் நான்....!!

நட்பாய் நீ என்
நரம்புகளில் பாய்கிறாய்...!
தோழியாய் நீ என்
சுவாசமாகிறாய்....!!

உன் நட்பென்னும்
விரல் பிடித்து நடப்பதால்  இனி
விண்வெளிக்கு மேலே சென்று
விளையாடி வருவேன்....!!

நட்ப்போடு சாய்ந்துகொள்ள  உன்
தோள்கள் இருப்பதால் இனி
தோல்விகளை கூட
தோற்கடித்து விடுவேன்....!!

ஆகாயம் ஒருநாள்
அழிந்து போகலாம்...!
உலகம் ஒருவேளை
உடைந்து போகலாம்....!!

ஆனாலும்
என் ஆயுள் முடியும் வரை
எனக்கு வேண்டும்...!
என் தோழியாய் நீ.........

Friday, 20 July 2018

வானமே எல்லை

"வானமே எல்லை"
*********************
நம்பிக்கை வை ,நம்பிக்கை வை
இதயமெனும் வைர பதக்கத்தில்
விதியை வெல்லும் மந்திரம் -அது நெஞ்சினில் உள்ள தந்திரம்
உன்னைச் சுற்றியுள்ள பந்தத்தை
நல்லாற்றலால் தூய்மைப் படுத்து
பிறகு உன்னில் தோன்றும்
தீர்க்கமான நேர்மையான எண்ணங்கள்
தாமதம் வேண்டாம் தலைதட்டும்
இடைவிடாது எண்ணிய எண்ணத்தை
முயற்சி செய்
வகுடெடுத்த முடிபோல
வாகாய் எல்லாம் அமையும் பார்
பின்னமில்லை பிணக்கமில்லை வீறுகொண்டு செயல்படுத்து
உடலும் அதுவே
உயிரும் அதுவே
என்றும் நினைவில் நிறுத்து
ஏற்றிய பொறி எக்காலமும்
அணையா இன்பப் பேரொளி
விரிந்து விரிந்து செல்லும்
வானம் மட்டும் எல்லை இல்லை
இருண்ட பேரண்டமும் தாண்டி
வெட்டவெளிதானே உனதெல்லை.

           காரைக்குடி கிருஷ்ணா

Monday, 4 June 2018

சங்கத்தமிழ்

தலைப்பு: சங்கத்தமிழ்
*************************
பாவகை: கலித்தாழிசை:
**************************
சங்கத் தமிழை தரணியில் சமைத்து
எங்கும் நிறைந்த ஏற்றமிகு தமிழே!
மங்காத புகழை மாண்புறச் செய்து
தங்கம் நிகர்த்த தனிப்பெருந் தமிழே!

வங்கப் புலியை வாகனமாய்க் கொண்டு
சிங்கமென முழங்கும் சீற்றமிகு தமிழே!
தொல்காப்பியம் படைத்த தொன்மைத் தமிழே!
பல்காப்பியம் நல்கிய பாங்குடைத் தமிழே!

மேகலையாய் சிலம்பாய் மேதினியில் மிளிர்ந்தாய்!
அகத்தியம் தந்தாய் ஐந்திணையும் வகுத்தாய்!
ஆணும் பெண்ணும் ஒன்றெனச் சொன்னாய்!
காணும் காட்சியைக் கலித்தொகை ஆக்கினாய்!

ஔவை மூதாட்டியின் அமுதச் சொல்லும்
ஔடத மாகும் அறவழி காட்டும்
வள்ளுவன் கண்ட வான்மறைத் தமிழும்
தெள்ளுதின் உரைக்கும் திறம்பட நடத்தும்!

மூவேந்தர் வளர்த்த முத்தமிழ் நீயே!
பாவேந்தர் பாட்டின் பண்ணும் நீயே!
கம்பனும் சாத்தனும் தந்த காவியமே!
உம்பரும் போற்றும் உயர்ந்த திருவே!

தென்பொதிகைச் சாரலே தென்னவன் மகளே!
என்னருந் தமிழ்நாட்டின் ஏகாந்த நாயகியே!
கன்னித் தமிழே கனியின் சுவையே!
கன்னல் மொழியே காப்போம் என்றும் உனையே!.

      காரைக்குடி கிருஷ்ணா

Monday, 7 May 2018

L


அவனும் நானும் அமுதும் தேனும்:
***************************
கரிய நிறத்தன்
கன்னல் மொழியன்
ஆணழகன் அல்ல
ஆனால் தாய்மை
உள்ளம் கொண்டோன்

பிள்ளைச் சிரிப்பால்
எனைப் பித்தம்
கொள்ளச் செய்திடுவான்

கதை கதையாய்ப்
பேசிக் காலமதை
இன்பமாக்கிடுவான்

தேக்கு மரமல்ல
அவன் தேகம்
என் மனம்
தேடிச் சாயும்
அவன் தோள்கள்

அவன் அருகாமை
ஒன்றே என்ஆயுள்
நீட்டிக்கும் அருமருந்து

அவன் சுண்டுவிரல்
பட்டாலே என்சோகம்
யாவும் தீரும்

சில்லென்று வீசும்
சிறுதென்றலாய் அவன்
சிரிக்கும் பூக்களாய் நான்
அவனும் நானும்
அமுதும் தேனும்

தாலாட்டாய் அவன்
அவன் மடிதவழும்
குழந்தையாய் நான்

எதற்கும் அஞ்சா
ஆண்களிறு அன்னான்
என்மனவாட்டம் அறிந்தால்
நெஞ்சுடைந்து போவான்

செந்தமிழ் இலக்கியமாய்
அவன்
அதைச் சுவைக்கும்
வாசகியாய் நான்

வேய்ங்குழல் இசையாய்
அவன்
மீட்டும் வீணையாய் நான்
அவனும் நானும்
அமுதும் தேனும்

எனை மகிழ்விக்க
வேடிக்கை மொழி
பேசிடுவான்
ஒருநாளும் அவன்
துயரம் காட்டான்

அன்பாய் அரவணைக்கும்
அன்னையாய் சிலநேரம்
கொஞ்சிப் பேசும்
குழவியாய் சிலநேரம்

உதவும் சோதரனாய்
சிலநேரம்
தோள்கொடுக்கும்
தோழனாய் சிலநேரம்
என்னவென்பேன்
இவன் உன்னத உறவை

வானும் போற்றும்
வையமும் போற்றும்
எங்கள் தூய
தமிழ்க் காதலை

    காரைக்குடி கிருஷ்ணா

Saturday, 24 March 2018

நீயின்றி நானில்லை


நிலைமண்டில ஆசிரியப்பா:
****************  **************                    நித்தமும் என்னுள் நினைவாய்க் கரைந்து!
சித்தம் கலங்கிச் சிதையச் செய்தாய்!
உயிராய் எந்தன் உதிரத்தில் கலந்தாய்!
தாயினும் மேலாய்த் தாங்கு வேனடி!
நீங்காதே எந்தன் நித்திலப் பெண்ணே.!

      காரைக்குடி கிருஷ்ணா

Wednesday, 21 March 2018

அன்னை என்பேனா
அன்புத் தோழன்
என்பேனா
கொஞ்சிப் பேசிடும்
குழவியும் நீயென்பேனா
உற்ற சோதரன் என்பேனா
அமுதத் தமிழில்
நான் வடிக்கும்
அழகுக் கவியென்பேனா
என்னவென்று
சொல்வேன் உன்
உன்னத உறவை
மயங்கி நிற்கிறேன் நானடா.

  காரைக்குடி கிருஷ்ணா

என் குறுங்கவிதையே
குறுகத் தறித்த
குறளும் நீயடா
கம்பன் எழுத மறந்த
காவியமும் நீயே
அன்பின் பிறப்பிடமே
பிள்ளைத் தமிழே
நானிருக்கிறேன்
என்ற ஒற்றை
வார்த்தையில்
உயிர் வாழ்கிறேன்
நானடா!

  காரைக்குடி கிருஷ்ணா

Saturday, 17 March 2018

வைகறை


நிலைமண்டில ஆசிரியப்பா: 
****-**************************                  வண்டினம் முரல வையகம் விழிக்க!
தண்ணொளி வீசிட தரணி செழிக்க!
ஆதவனும் இங்கே அழகாய்த் தோன்றி!
பேதங்க ளின்றி மண்ணுயிர் காத்திட!
இதமாய் வந்தான் இன்பம் கூட்டவே!

காரைக்குடி கிருஷ்ணா

விருத்தப்பா

கற்கண்டே கனியமுதே கற்றவர் போற்றும்
பைந்தமிழே பெண்ணினம் வியக்கும் பேரழகே
தென்திசை உதித்த தென்னவன் கொடியே
பெண்மகளே நீ வந்து பேசு

எங்கும் தமிழென முழங்கு

18 -02 -2018: தமின்னைத் தமிழ்ச் சங்கம்:
***------********* கவியரங்கக் கவிதை:
************************
தலைப்பு: எங்கும் தமிழென
முழங்கு:
*****************************
கலித்தாழிசை:
******************
அகத்தியன் தந்த அமுதத் தமிழே
செகத்தின் மூத்த செம்மை மொழியே
பொதுமறை கண்ட பொதிகைத் தமிழே
ஏதுனக்கு ஈடே, எட்டுத் திக்கும்
ஏறுநடை போடும் எந்தை மொழியே
வறுமை அறியா வஞ்சியும் நீயே
கன்னித் தமிழே கன்னல் மொழியே
மேன்மை கொண்ட மென்மைத் தமிழே
என்றும் புதிதாய் இனிமை நல்கும்
வன்திறல் கொண்ட வண்மொழி வாழியவே
எங்கும் உனது ஏற்றம் கொண்டு
ஓங்குக தமிழே என்றும் ஒளிர்க தமிழே!.

       காரைக்குடி கிருஷ்ணா

Thursday, 8 March 2018

தாயெனும் பெண்

தாயெனும் பெண்:
***********************
ஓடி யுழைத்து
உதிரம் தன்னை
உணவாக்கி
உயிர் சுமந்து
குலம் காக்கும்
உன்னதப் பிறவி

ஒருநொடி கூட
தனக்கென வாழா
தன்னிகர் இல்லா
தனிப் பிறவி

இடியென துன்பம்
வரினும்
இனிதே ஏற்கும்
இவள்
பிள்ளையின் சிற்றெரும்புக்
கடிக்கே
சிதறிப் போவாள்

மற்றவரின் துன்பத்தில்
தோள் கொடுக்கும்
இவள் தன்
இன்ப துன்பத்தை
வெளிக் காட்டா
ஆழ்கடல் அதிசயம்.  

    காரைக்குடி கிருஷ்ணா
         
(அனைத்துப் பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள் :)

Tuesday, 6 March 2018

சிரியாவில் குண்டு வீச்சு

படக்கவிதை
*************-*
மனிதனை மனிதன்
வேட்டையாடும் மனிதம்
மறந்த மனிதவிலங்கின்
கொடூர நிலைகண்டு
கற்களும் கண்ணீர்
சிந்தி கரைந்திடுமே.!

    காரைக்குடி கிருஷ்ணா

Friday, 16 February 2018

உறங்காமல்
உன்னை நினைக்கிறேன்....
உன்னைப்  பார்க்காமல்...
உறங்காமல் தவிக்கிறேன்...
உன்னுடன் பேசாமல்...
உறக்கத்தில் கூட துடிக்கிறேன்..
உன்னால் தனிமையை உணர்கிறேன்...
அந்தத் தனிமையை உணரக் கூட...
உன்னை மட்டுமே கேட்கிறேன்.....

Thursday, 25 January 2018

அறம் செழிக்க வாழ்வோம் (கலித்தாழிசை )


அறவழி நின்று அன்பு மொழிபேசி
பிறஉயிர் தன்னைப் பிரித்துப் பார்க்கா
உன்னத நிலையும் உன்னுள் கொண்டு
இன்முகம் காட்டி இனிமை பகன்றிடு !

அயற்சி இன்றியே அயராது தொண்டாற்றி
முயற்சி செய்தே முற்போக்காய் வாழ்ந்து
பிறமொழி பேசும் பிறநாட்டுச் சோதரனை
பிறழ்தல் இன்றி பிடிப்பாய் இருந்திடு
!
நீதி காத்து நீசம் இன்றி
அதிசயம் செய்து அகிலம் காத்து
சூழ்ச்சிமிக்க வாழ்வில் சூதினை விலக்கி
காழ்புணர்ச்சி அகற்றி காத்திடு உலகை !

கங்கை போற்றும் கலியுக மனிதா
நங்கையரின் பெருமையை நாடுபோற்றச் செய்து
பிறனில் விழையாப் பேராண்மை கொண்டு
உறவைப் பேணி உண்மைநெறி நின்றிடு !

ஐம்பொறி அடக்கி அண்டம் வென்று
வம்பில்லாச் சமுதாயத்தை வையகத்தில் உருவாக்கி
அன்பைப் போதித்து அரவணைப்பாய் இருந்து
இன்னல்கள் போக்கியே இன்பமாய் வாழ்ந்திடு!

காற்றடைத்த உடலில் காற்றிருக்கும் வரை
பற்றற்ற நிலையைப் பற்றியே வாழ்ந்து
மண்ணாக உதிர்ந்து மாயும் முன்னே
ஒன்றாக வாழ்ந்தே ஓங்கிய நிலை எய்திடு!.

     காரைக்குடி கிருஷ்ணா

Saturday, 20 January 2018

அச்சம் தவிர்:
****************
வீரத்தமிழ் படைத்த வீரா!
கல்லணை கட்டிய கரிகாலா!

சீதையை மீட்ட
இராமனைப் போல்
காவிரியை மீட்டெடு!

இரத்தம் குடிக்கும்
மீத்தேன் திட்டத்தை
விரட்டியே தமிழ்
மண்ணைக் காத்திடு!

வீர விளையாட்டு
நமது அடையாளம்
அடையாள மதனைத்
தடை செய்பவர்களை
சட்டங்கள் செய்தே
தடை நீக்கிடு!

மொழிமீது படையெடுப்பவனை
தமிழ்ப் புலமையால்
வாகை சூடிடு!

அச்சம் கொள்ளாதே
ஒச்சம் அடைவாய்!

அடங்கி ஒடுங்கி
இருக்க நீயொன்றும்
அஞ்சும் ஆமையல்ல
புன்மைத் தேரையுமல்ல!

குன்றெனவே நிமிர்ந்து நில்
நேர்படவே பேசு
உன் விழிதனில்
உலகிற்கு ஒளிகொடு!

உடைமை மக்களுக்குப்
பொதுவே என்பதுணர்த்து!
இருப்பவன் இல்லாதவன்
என்பதில்லாமற் செய்!

தொகை தொகையாய்க்
கொள்ளையடித்த செல்வமெல்லாம்
அடுக்கடுக்காய் சிலபேரிடம்
நச்சுக் கனியாய்!

இளம் வீரா!
தீரத் தமிழா!
உன் தீரத்தால்
உடைமை யெல்லாம்
மக்களுக்குப் பொதுவாக்கிடு!

செயலைச் செய்துவிடு!
விளையும் பார்!
மாற்றம் உனதுடலில்!

புதுஇரத்தம் பாய
புரட்சிகள் செய்வாய்!
மானுடம் தழைக்க!
புதுஅகிலம் படைப்பாய்.!

    காரைக்குடி கிருஷ்ணா

28 -01 -2018:
கவியரங்கக் கவிதை:
*************************
சொல்லத்தான் நினைக்கிறேன்:
*******************
தலைப்பு : புன்னகை செய்:
***********;*****************
பூமித்தாயே புன்னகைசெய் 
ஒருமுறை
மன்னிப்பாயோ? பல தலைமுறை
மாதம் மும்மாறி மழை -அது
மறந்துபோன பழைய புராணக்கதை
பளிங்குத் தண்ணீரைச் சுமந்து கிடந்த
கண்மாய் குளங்கள் -அவை
பதுங்கியது எங்கே?
எங்கெங்கும் இருந்த
காலப்பருவச் சூழ்நிலை என்னாச்சு?
எருதுமிதித்தா தொழிபோல
மாறிப் பல நாளாச்சு
இவள் மடுவில் சுரக்கும் பாலான தேனருவி போதாதோ?
பொத்தும் குடிக்கின்றாயே இரத்தம் சுண்ட
வானுச்சி நோக்கின் பேரழகு குறைந்ததோ?
ஒப்பனை சேர்க்கின்றாயே?
தொழில் புரட்சியின் கரும்புகையால்
வளங்களில் இவள் காமதேனு கற்பக விருட்சம்
அடியோடு சுரண்டி அள்ளிவிட்டாய்
இவள் காரை எலும்பு தெரிய
நெகிழி இவளை நைத்தது அதிகமே
இவள் அங்கங்களெங்கும் புரையோட
விண்ணுலக ஞானத்தைச் சுழற்றிவிட்டாய்
வானில் இவள் தோலைக் கிழித்து விட்டாய்
விஞ்ஞான மனிதா
உன் வேகத்தைத் தணித்துக்கொள்
பூமியில் வாழும்நிலை மட்டுமல்ல
ஜனனமும் குறைந்து விடும்
நிறைமனதில்லா பகுத்தறிவாளனே
பகட்டாய் இராதே
பூமித்தாயும் ஓர் உயிர் ஜீவன்தானே
சாக்காடு வாராதோ? -உன்
விண்ணுலகச் சிந்தைக்கு
நோக்காடு வந்துள்ளதே
மண்ணுலக விந்தைக்கு
பெற்றெடுத்தவள் முதல் தாய்
வளர்த்தெடுத்தவள் இவள் இரண்டாம் தாய்
இவள் மற்றொரு கர்ப்பப் பை
கருவறுத்து விடாதே
கர்ப்பம் கலங்க
மற்ற மலட்டுக் கிரகங்களின் தேடல் வேண்டாம்
உற்றவளின் தேடல் வேண்டும்
தேடலோடு உள்ளார்ந்த புரிதலும் வேண்டும்
பூமித்தாயே புன்னகை செய் ஒருமுறை.

     காரைக்குடி கிருஷ்ணா...

Thursday, 18 January 2018

நன்றி சொல்வோம்

நன்றி சொல்வோம்
******-*****************
நிலைமண்டில ஆசிரியப்பா
**-----**************
உலகோர் போற்றும் உன்னதச் சுடரே
பலபொருள் தந்து பல்லுயிர் காக்கும்
உயிரின் முதலே உயர்ந்த பொருளே
பயிர்கள் வளர்த்து பயன்கள் நல்கி
எல்லாம் நல்கிய எல்லோன் போற்றியே.

     காரைக்குடி கிருஷ்ணா

Tuesday, 16 January 2018

அறம் வளர்ப்போம்

அறம் வளர்ப்போம்;
***********************
தீச்சொல் அகற்றி
இனியமொழி பகன்று/
பிறன்பொருள் பற்றாது
தன்பொருள் கரவாது/
இல்லார்க்கு ஈந்து
மெய்வழி நின்று/
பொறைகாத்து எவ்வுயிர்க்கும்
இன்னாசெய்யாதிருத்தலே அறமாகும்./

     காரைக்குடி கிருஷ்ணா

Thursday, 11 January 2018

முகம் தொலைத்த முகிலினங்கள்


காத்திருக்கான் காத்திருக்கான்
விவசாயி காத்திருக்கான்
நல்லமழை பெய்யாதா?
விவசாயம் செழிக்காதா?
ஏக்கத்தில் விவசாயி
மடியில் விதையுடன்
ஏரிகுளம் காய்ஞ்சிருச்சு
வயல்வரப்பு வெடிப்பாச்சு
பூமியில் சூடும்
ஏறிப் போச்சு
பச்ச மரம்
வாடிப் போச்சு
மாடு மேய
புல் இல்லை
காடழிஞ்சு நாடு
பெருசாச்சு
காட்டு விலங்கும்
நாட்டுக்கு வந்தாச்சு
தண்ணீரும் இங்கே
காசாச்சு
தரணியில் எல்லாம்
மாறிப் போச்சு
நீ மட்டும் என்ன
விதி விலக்கா?
அடையாளம் தொலைந்து
அலைகின்றாய்
காலம் மாறி
வருகின்றாய்
காவல் தெய்வம்
நீ அல்லவா?
உனது இருப்பை
நிலை நாட்டி விடு.

        காரைக்குடி கிருஷ்ணா

ஹைக்கூ

வாழும் நாள்
கூடிக்கொண்டே போகிறது
"அனுபவம்".

      காரைக்குடி கிருஷ்ணார்ப்பணம்

Wednesday, 10 January 2018

தமிழ்த்தாய் வாழ்த்து


நீலவண்ணக் கடலை
ஆடையாய்த் தரித்த ஆரணங்கே!
குளிர்நிலவை பிறைநெற்றியில்
திலகமாய்ச் சூடியவளே!
மேருமலையே உனது
கருங்கூந்தலானதே!
குளிர்ந்த காஷ்மீர்
உனதிரு கண்களானதே!
வற்றாத ஆறுகளே
நீயணிந்த வெள்ளிய
அணிகலன்களே!
முக்கடல் சங்கமம்
கன்னியிலே!
உனது ஒற்றைப் பாதமே
தமிழகமானதே!
வங்கப் புலியே உன்
வாகனமானதே!
முத்தமிழ் தந்து
திருவாய் மலர்ந்தவளே!
முன்தோன்றிய மூத்தவளே!
கன்னல் சுவையே!
கனியமுதே !
என்றும் மழலையாய்த்
தவழும் உன் திறம்
கண்டு சிந்தை
வியக்கின்றதே!
உன்னில்தான் ஆழ்கடலாய்
எத்தனை பொருண்மைகள்!
அருந்தமிழே! ஆரணங்கே!
சிந்தையில் ஊறும் தேனே!
எங்கள் ஏற்றமும் உன்னாலே!
தேமொழியால் சிந்தை
நிறைப்பவளே!
எத்திக்கும் உன் மணமே!                                                                                      செழுந்தமிழே!
எண்ணமெலாம் ஆள்பவளே!
எங்கள் பேச்சிலும்
மூச்சிலும் நீயே!
அன்னைத் தமிழே!
வணங்குகின்றோம் உனையே!

       காரைக்குடி கிருஷ்ணா