Wednesday, 10 January 2018

தமிழ்த்தாய் வாழ்த்து


நீலவண்ணக் கடலை
ஆடையாய்த் தரித்த ஆரணங்கே!
குளிர்நிலவை பிறைநெற்றியில்
திலகமாய்ச் சூடியவளே!
மேருமலையே உனது
கருங்கூந்தலானதே!
குளிர்ந்த காஷ்மீர்
உனதிரு கண்களானதே!
வற்றாத ஆறுகளே
நீயணிந்த வெள்ளிய
அணிகலன்களே!
முக்கடல் சங்கமம்
கன்னியிலே!
உனது ஒற்றைப் பாதமே
தமிழகமானதே!
வங்கப் புலியே உன்
வாகனமானதே!
முத்தமிழ் தந்து
திருவாய் மலர்ந்தவளே!
முன்தோன்றிய மூத்தவளே!
கன்னல் சுவையே!
கனியமுதே !
என்றும் மழலையாய்த்
தவழும் உன் திறம்
கண்டு சிந்தை
வியக்கின்றதே!
உன்னில்தான் ஆழ்கடலாய்
எத்தனை பொருண்மைகள்!
அருந்தமிழே! ஆரணங்கே!
சிந்தையில் ஊறும் தேனே!
எங்கள் ஏற்றமும் உன்னாலே!
தேமொழியால் சிந்தை
நிறைப்பவளே!
எத்திக்கும் உன் மணமே!                                                                                      செழுந்தமிழே!
எண்ணமெலாம் ஆள்பவளே!
எங்கள் பேச்சிலும்
மூச்சிலும் நீயே!
அன்னைத் தமிழே!
வணங்குகின்றோம் உனையே!

       காரைக்குடி கிருஷ்ணா

No comments:

Post a Comment