Monday, 4 June 2018

சங்கத்தமிழ்

தலைப்பு: சங்கத்தமிழ்
*************************
பாவகை: கலித்தாழிசை:
**************************
சங்கத் தமிழை தரணியில் சமைத்து
எங்கும் நிறைந்த ஏற்றமிகு தமிழே!
மங்காத புகழை மாண்புறச் செய்து
தங்கம் நிகர்த்த தனிப்பெருந் தமிழே!

வங்கப் புலியை வாகனமாய்க் கொண்டு
சிங்கமென முழங்கும் சீற்றமிகு தமிழே!
தொல்காப்பியம் படைத்த தொன்மைத் தமிழே!
பல்காப்பியம் நல்கிய பாங்குடைத் தமிழே!

மேகலையாய் சிலம்பாய் மேதினியில் மிளிர்ந்தாய்!
அகத்தியம் தந்தாய் ஐந்திணையும் வகுத்தாய்!
ஆணும் பெண்ணும் ஒன்றெனச் சொன்னாய்!
காணும் காட்சியைக் கலித்தொகை ஆக்கினாய்!

ஔவை மூதாட்டியின் அமுதச் சொல்லும்
ஔடத மாகும் அறவழி காட்டும்
வள்ளுவன் கண்ட வான்மறைத் தமிழும்
தெள்ளுதின் உரைக்கும் திறம்பட நடத்தும்!

மூவேந்தர் வளர்த்த முத்தமிழ் நீயே!
பாவேந்தர் பாட்டின் பண்ணும் நீயே!
கம்பனும் சாத்தனும் தந்த காவியமே!
உம்பரும் போற்றும் உயர்ந்த திருவே!

தென்பொதிகைச் சாரலே தென்னவன் மகளே!
என்னருந் தமிழ்நாட்டின் ஏகாந்த நாயகியே!
கன்னித் தமிழே கனியின் சுவையே!
கன்னல் மொழியே காப்போம் என்றும் உனையே!.

      காரைக்குடி கிருஷ்ணா

No comments:

Post a Comment