Saturday, 20 January 2018

28 -01 -2018:
கவியரங்கக் கவிதை:
*************************
சொல்லத்தான் நினைக்கிறேன்:
*******************
தலைப்பு : புன்னகை செய்:
***********;*****************
பூமித்தாயே புன்னகைசெய் 
ஒருமுறை
மன்னிப்பாயோ? பல தலைமுறை
மாதம் மும்மாறி மழை -அது
மறந்துபோன பழைய புராணக்கதை
பளிங்குத் தண்ணீரைச் சுமந்து கிடந்த
கண்மாய் குளங்கள் -அவை
பதுங்கியது எங்கே?
எங்கெங்கும் இருந்த
காலப்பருவச் சூழ்நிலை என்னாச்சு?
எருதுமிதித்தா தொழிபோல
மாறிப் பல நாளாச்சு
இவள் மடுவில் சுரக்கும் பாலான தேனருவி போதாதோ?
பொத்தும் குடிக்கின்றாயே இரத்தம் சுண்ட
வானுச்சி நோக்கின் பேரழகு குறைந்ததோ?
ஒப்பனை சேர்க்கின்றாயே?
தொழில் புரட்சியின் கரும்புகையால்
வளங்களில் இவள் காமதேனு கற்பக விருட்சம்
அடியோடு சுரண்டி அள்ளிவிட்டாய்
இவள் காரை எலும்பு தெரிய
நெகிழி இவளை நைத்தது அதிகமே
இவள் அங்கங்களெங்கும் புரையோட
விண்ணுலக ஞானத்தைச் சுழற்றிவிட்டாய்
வானில் இவள் தோலைக் கிழித்து விட்டாய்
விஞ்ஞான மனிதா
உன் வேகத்தைத் தணித்துக்கொள்
பூமியில் வாழும்நிலை மட்டுமல்ல
ஜனனமும் குறைந்து விடும்
நிறைமனதில்லா பகுத்தறிவாளனே
பகட்டாய் இராதே
பூமித்தாயும் ஓர் உயிர் ஜீவன்தானே
சாக்காடு வாராதோ? -உன்
விண்ணுலகச் சிந்தைக்கு
நோக்காடு வந்துள்ளதே
மண்ணுலக விந்தைக்கு
பெற்றெடுத்தவள் முதல் தாய்
வளர்த்தெடுத்தவள் இவள் இரண்டாம் தாய்
இவள் மற்றொரு கர்ப்பப் பை
கருவறுத்து விடாதே
கர்ப்பம் கலங்க
மற்ற மலட்டுக் கிரகங்களின் தேடல் வேண்டாம்
உற்றவளின் தேடல் வேண்டும்
தேடலோடு உள்ளார்ந்த புரிதலும் வேண்டும்
பூமித்தாயே புன்னகை செய் ஒருமுறை.

     காரைக்குடி கிருஷ்ணா...

No comments:

Post a Comment