என்னை உருவாக்கிய நிலாச்சோறு குழுமத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
சுதந்திரம்:
*************
பெற்ற தாயும்
நிலைகுலைதல் காண்பீரோ?
கூடிய மனைவியும்
மாற்றானுக்குச் சொந்தமாதல்
சரியாமோ?
பெற்ற பிள்ளைதனை
பேயிடம் தவிக்க
விடல் முறையாமோ?
நம் உழைப்பை
எத்திப் பிழைக்கும்
எத்தர்களை எட்டி
உதைக்காமல் ஏமாந்து
நிற்பதுவும் ஏனோ?
நெல்விளையும் கழனிகளை
காட்டெருமை அழிப்பதுகண்டு
மனம் பொறுத்திடுமோ?
பாதுகாத்த பன்னரும்
வளங்களை
பகைவன் அடைய
அனுமதிப்பதா?
உன் சிந்தையும்
சிதைந்து போனதோ?
கைகளும் கட்டுண்டதோ?
மெய்யும் உணர்விழந்து
ஒடுங்கிப் போனதோ?
புரையோடிப் போன
கண்களின் விழித்திரை
அகற்றிடு!
கூடி முழக்கமிட்டு
செல்லரித்துப் போன
சிந்தைதனைச் சீராக்கி
கைகளை ஒன்று
சேர்த்திடு!
வானமும் புவியும்
நிலவும் இரவியும்
காற்றும் மலையும்
யாவர்க்கும் பொதுவே!
இறைவன் படைப்பில்
யாவையும் சமமே!
மனிதனை மனிதன்
அடிமை கொள்ளுதல்
சிந்தையில்லா சிறுமைத்
தனமன்றோ!
சிந்தையில் ஒன்றாகி
செயலதனைச் செய்திடவே
கணப்பொழுதும் காத்திராமல்
இப்பொழுதே விரைந்திடு!
வீறுகொண் டெழுந்திடு!
வெற்றி உனதாக்கிடு!
சுதந்திரத் தாகம்தனை
சுவைத்தே தீர்த்திடு.!
காரைக்குடி கிருஷ்ணா