குறளுக்கு புதுக்கவிதை எழுதத் தூண்டிய நிலாச்சோறு குழுமத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்:
குறளோவியம்: 8
********************
குறள் (கரப்பினுங் கையிகந்த் தொல்லாநின் உண்கண்
உரைகல் உறுவதொன் றுண்டு)
********
காதல் இல்லையென்று
உன்வாய் மொழிதான்
சொல்கிறதடி!
ஓராயிரம் முறை
நீ எனைக் கடக்கும்
போதும்
ஒரு வார்த்தை கூட
பகரவில்லையடி !
நான் போகும் வழி
உன் பார்வை
எனைக் காண
தவறுவதில்லை!
நான் வரும்
பாதை நோக்கும்
உன் கண்களும்
எனைக் காணாமல்
வருந்துவதை
சொல்லாமல் சொல்கிறதே!
நீ எனைப் பிரிந்தால்
ஆதவனைக் காணா
தாமரையாய் உன்
காதல் உள்ளம்
வாடுவதை
என் உள்ளம்
அறியுமடி ! அன்பே.!
*****************************
குறள் : (நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.)
***********
கார்கால மழையாய்
அன்பைப் பொழிபவனே!
கண்ணின் மணியாய்
எனை வழிநடத்துபவனே!
உயிரின் உயிராய்
என்னுள் நிறைந்தவனே!
நாம் கூடிக்களித்த காலங்களின் நினைவுகளும்
என் நெஞ்சை வருடுகிறதே!
நீ எனை நீங்கி
ஒருநாளே ஆனாலும்
காட்சிகளும் மாறாமல்
கணப்பொழுதும்
யுகமாய் கழிகின்றதே!
உனை நினைத்தே
என்கை வளையும்
நெகிழுகின்றதே!
பனித்தூவும் காலமதிலும்
என்மேனி வெந்நீராய்
சுடுகின்றதே!
மணித்துளியும் நீளுகின்றதே!
மனமதுவும் உன்
இடந்தேடி உனைச்சேர
ஏங்குகின்றதே.!
காரைக்குடி கிருஷ்ணா
*********
No comments:
Post a Comment