Monday, 8 January 2018

முகவரி

முகவரி:
*********
பரந்த உலகம்
கண் முன்னே

அகக்கண் கொண்டு
அத்தனையும் பார்

பிறந்தமக்கள் அனைவரும்
ஒன்றே என்றுணர்

பிறஉயிர் படும்
துன்பம் தனை
உனதாக்கிப் பார்

ஒளிதரும் ஆதவனும்
குளிர்தரும் நிலவும்
பேதம் பார்ப்பதில்லை

ஆழ்கடலும் பொதுவே
நீள்விசும்பும் பொதுவே

சுவாசிக்கும் காற்றும் ஒன்றே
பசியும் ஒன்றே
தூக்கமும் ஒன்றே

கொலைமலிந்த இவ்வுலகில்
குற்றம் நீக்கப் போராடு
விலைமதிப்பில்லா உயிர்கள்
அதனை உதிரம்
கொடுத்தும் காத்திடு

அற வழியில் 
அகிலம் ஆளப்பழகு

உண்பவை நாழியே
உடுப்பவை இரண்டே

உழைப்பால் உயர்ந்திடு
பெற்ற திருவை
சுற்றம் தழைக்க
கொடுத்திடு

உடலுக்கும் உயிருக்கும் 
அழிவுண்டு
ஆன்மாவைப் போல்
உனது பிறப்பை
நிலை நாட்டிடு

அனைத்தும் பொதுவாக்கி
பிரிவினை அகற்றிடு

அன்பால் உலகம்தனை
ஒன்றேயெனக் கண்டிடு

இப்புவியைப் போல்
உலகிற்கு வித்தாகி
நின்றிடு

வாழும் காலம்
கொஞ்சமே ஞாலம்
தழுவியே வாழ்ந்திடு

மண்ணில் மறைந்தாலும்
மன்னுதல் திடமே
இவ்வுலகம் உனையே
அடியொற்றி நடந்திடுமே

காரைக்குடி கிருஷ்ணா


No comments:

Post a Comment