அறவழி நின்று அன்பு மொழிபேசி
பிறஉயிர் தன்னைப் பிரித்துப் பார்க்கா
உன்னத நிலையும் உன்னுள் கொண்டு
இன்முகம் காட்டி இனிமை பகன்றிடு !
அயற்சி இன்றியே அயராது தொண்டாற்றி
முயற்சி செய்தே முற்போக்காய் வாழ்ந்து
பிறமொழி பேசும் பிறநாட்டுச் சோதரனை
பிறழ்தல் இன்றி பிடிப்பாய் இருந்திடு
!
நீதி காத்து நீசம் இன்றி
அதிசயம் செய்து அகிலம் காத்து
சூழ்ச்சிமிக்க வாழ்வில் சூதினை விலக்கி
காழ்புணர்ச்சி அகற்றி காத்திடு உலகை !
கங்கை போற்றும் கலியுக மனிதா
நங்கையரின் பெருமையை நாடுபோற்றச் செய்து
பிறனில் விழையாப் பேராண்மை கொண்டு
உறவைப் பேணி உண்மைநெறி நின்றிடு !
ஐம்பொறி அடக்கி அண்டம் வென்று
வம்பில்லாச் சமுதாயத்தை வையகத்தில் உருவாக்கி
அன்பைப் போதித்து அரவணைப்பாய் இருந்து
இன்னல்கள் போக்கியே இன்பமாய் வாழ்ந்திடு!
காற்றடைத்த உடலில் காற்றிருக்கும் வரை
பற்றற்ற நிலையைப் பற்றியே வாழ்ந்து
மண்ணாக உதிர்ந்து மாயும் முன்னே
ஒன்றாக வாழ்ந்தே ஓங்கிய நிலை எய்திடு!.
காரைக்குடி கிருஷ்ணா