தேனருந்த வண்டுகள்
வழி மாறிப் போகிறது
பெண்ணின் முகம்
காரைக்குடி கிருஷ்ணா
ஒலிக்கட்டும் பறை;
****--*---*************
ஒலிக்கட்டும் பறை
ஓங்கி ஒலிக்கட்டும் பெண்மை
பிள்ளைக்கறி கேட்கும்
பேயின் மகன்களை
பிய்த்து எறிந்திடவே
ஒலிக்கட்டும் பறை
பெண்மை வாழ்கவென்று
பெருமுழக்கம் செய்துவிட்டு
பேதமுடன் பார்க்கும்
நயவஞ்சகர் கூட்டத்தை
நையப் புடைத்திட
ஒலிக்கட்டும் பறை
பெண்ணைப் பொருளாய்ப்
போதையாய்ப் பார்க்கும்
நாயின் வாரிசுகளை
நறுக்கி எறிந்திட
ஒலிக்கட்டும் பறை
வழிகள் இருந்தும்
வாய்ப்புகள் நல்கா
வஞ்சகர் உலகை
வதம்செய் திடவே
ஒலிக்கட்டும் பறை
பெண்ணுக்கு ஒன்றென்றால்
பெருந்திரளாய்த் திரண்டு
பேருரு வெடுப்போம் என்றே
ஒலிக்கட்டும் பறை
பாலடிப்படையில் பாகுபாடில்லா
பாரினைப் படைத்திடவே
ஒலிக்கட்டும் பறை
காரைக்குடி கிருஷ்ணா
(புகைப்பட. உதவி: ஒளியோவியர்: இரா. முத்துசாமி)
என் ஆசிரியர் நண்பர்கள் அனைவருக்கும் ஆசிரியர்தின நல்வாழ்த்துகள்;
**********************************
அன்று
என் கொள்ளுத் தாத்தனும்
கொள்ளுப் பாட்டியும்
கையெழுத்திடத் தெரியாததால்
இட்டனர் கைநாட்டு
இன்று நான்
பெற்றதோ
ஆய்வியல் நிறைஞர் பட்டம்
அலுவலகத்தில் இடுவதோ கைநாட்டு
காரைக்குடி கிருஷ்ணா
(புகைப்பட உதவி : ஒளியோவியர் : இரா. முத்துசாமி; நன்றி முத்து)
எத்தனை எத்தனை
முகங்கள் மனிதருள்
இத்தரை மீதினில்
எண்ணில்அடங்கா
அன்பாய் அழகாய்
அரக்கராய் சிலமுகம்
அன்னையாய் ஆண்டவனாய்
அகிலத்தில் பலமுகம்
பொய்யராய்ப் புலையராய்ப்
பாரினில் பலவிதம்
இத்தனை மனிதரைக்
கடப்பது எங்ஙனம்
முகங்கள் அறிந்திடு
முகத்திரை கிழித்திடு
மனிதனாய் வாழ்ந்திடு
மன்பதை காத்திடு.
காரைக்குடி கிருஷ்ணா
பள்ளிக்கூடம் போவோம்
பாடம் நன்கு படிப்போம்
ஒழுக்கம் அதைக் கற்போம்
ஓங்கி உலகில் வாழ்வோம் -(பள்ளி)
நல்வழியை நாடுவோம்
நலமுடனே வாழுவோம்
வான்மறையும் ஓதுவோம்
வாழ்வினிலே உயருவோம் (பள்ளி)
சேருமிடம் சேர்ந்திடுவோம்
சிறப்புடனே வாழ்ந்திடு வோம்
அன்புநெறி போற்றிடுவோம்
அறவழியில் வாழ்ந்திடுவோம்.( பள்ளி)
காரைக்குடி கிருஷ்ணா
அழகு அழகு
உன் காதல் அழகு
அழகு அழகு
உன் நினைவும் அழகு (2)
என்னுயிராய் ஆனவளே
என்மனதை ஆள்பவளே(2)
நெஞ்சினிலே நின்றுவிட்டாய்
நிம்மதியைத் தந்து விட்டாய்
கண்ணிரண்டில் உன்னை வைத்துக்
காலமெல்லாம் காத்திருப்பேன் (அழகு)
அன்னமே உன்னைக் கண்டேன்
அனுதினமும் தேடி வந்தேன்(2)
செம்பவளச் சிரிப்பழகே
சேர்த்தணைக்க வேண்டுமடி
அன்னநடை பயின்றவளே
ஆசையெல்லாம் தீர்ப்பவளே (2)
கண்ணே உன் காலடியில்
என்னுயிரைச் சேர்க்க வந்தேன்.(2)
மானே உன் கரம்பிடிக்க
மாமன் நானும் விரைந்து வந்தேன்
கருங்குயிலே கண்மணியே
காலத்தோடு வந்துவிடு.
காரைக்குடி கிருஷ்ணா
அன்று
என் கொள்ளுத் தாத்தனும்
கொள்ளும் பாட்டியும்
படிப்பறிவில்லாததால்
இட்டனர் கைநாட்டு
இன்று நான்
படித்ததோ
ஆய்வியல் நிறைஞர் பட்டம்
அலுவலகத்தில் இடுவதோ கைநாட்டு
நட்பும் பொய்
நகைப்பும் பொய்
அன்பும் பொய்
அனைத்தும் பொய்
சொல் வேறு
செயல் வேறாய்
எதோ ஒன்றை
எதிர்பார்த்தே
நகரும் கூட்டம்
கூடவே இருந்து
கொள்ளி போடும்
குறுங்கரடிக் கூட்டம்
உதட்டில் தேனும்
உள்ளத்தில் அரவின் நச்சும்
மனித மனங்களைக் கொன்று
பிணத்தின் மீதேறி
பணத்தை நாடும்
யார் இருந்தால் என்ன?
யார் இறந்தால் என்ன?
பணம் ஒன்றே
பிரதானம்
இந்த மனித
மிருகங்களை
அடையாளம் காண்பதற்குள்
கொண்ட இலட்சியமும்
கானல் நீராய்
வாழ்வதுவும் முடிந்தே தீரும்.
காரைக்குடி கிருஷ்ணா
கலங்காதே கண்ணே
**************************
மன்னை அரசியே
மனிதம் நிறைந்தவளே
என்னடி சிந்தனை?
ஏனிந்த வேதனை?
பெண்வழிச் சமூகம் மறந்தான்
பெண்மை சிதைக்கின்றான்
பேடிமை கற்கின்றான்
அம்மா என்கின்றான்
அகத்தே வேறாகின்றான்
தமக்கை என்றழைப்பான்
தனிமையில் தொட்டிடத் தவிப்பான்
சிறுமியையும் விடமாட்டான்
சிறுமனம் படைத்தான்- இந்த
சீர்கெட்ட மனிதனைத்
திருத்தவா யோசனை?
மயங்காதே தோழி
மதிகெட்ட மனதை மாற்ற
நல்வழி காட்ட
நன்னெறி புகட்ட
நாளும் இதையோதிட
அன்பென்ற ஆயுதம் கொண்டு
ஆசிரியப்பணி நின்று
மாண்புமிகு மாணவச்சமூகம் படைப்போம்
மன்பதை காப்போம்
கலங்காதே கண்ணே
காலம் கனிவது திண்ணம்.
அன்புடன் : காரைக்குடி கிருஷ்ணா
சமூகப் பார்வை
******--------******
மனிதம் மறந்த மக்கள் கூட்டம்
வணிகம் ஒன்றே வாழ்வின் நோக்கம்
படிப்பின் எல்லை பணத்தின் ஏக்கம்
அடிமையும் அச்சமும் அகல வில்லையே
மதுவும் மதமும் மாறியபா டில்லை
சிந்தனை தூண்டும் இணையமு மில்லை
தண்டனை தவறைக் குறைப்பது மில்லை
இந்தநிலை மாற இயம்புவா ரில்லையே
வாய்மையு மில்லை வண்மையு மில்லை
பொய்ய ருலகில் புண்ணிய மில்லை
குண்டு குழியில்லா சாலைக ளில்லை
தொண்டுகள் செய்ய துணிவு மில்லையே
களவும் கையூட்டும் குறையவே இல்லை
கலப்படம் இல்லாப் பொருளு மில்லை
வல்லுறவு என்பது வாடிக்கை யாச்சு
தொல்லுலக மாண்பும் தொலைந்தே போச்சே.
காரைக்குடி கிருஷ்ணா
எத்தனை எத்தனை முகங்கள் மனிதருள்
இத்தரை மீதினில் எண்ணில்
அடங்கா
அன்பாய் அழகாய் அரக்கராய் சிலமுகம்
அன்னையாய் ஆண்டவனாய் அகிலத்தில் பலமுகம்
பொய்யராய்ப் புலையராய் பாரினில் பலவிதம்
இத்தனை மனிதரைக் கடப்பது எங்ஙனம்
முகங்கள் அறிந்திடு முகத்திரை கிழித்திடு
மனிதனாய் வாழ்ந்திடு
மன்பதை காத்திடு.
காரைக்குடி கிருஷ்ணா
காதல் மேகமே
காற்றின் கீதமே
வேதமாய் என்னுள்
வேள்வி ஆனாய்
நாதமாய் நெஞ்சில்
நைந்துருகச் செய்கின்றாய்
வாசம் கொண்ட
வஞ்சிநீ வாழ்கவே.
காரைக்குடி கிருஷ்ணா