Saturday, 24 March 2018

நீயின்றி நானில்லை


நிலைமண்டில ஆசிரியப்பா:
****************  **************                    நித்தமும் என்னுள் நினைவாய்க் கரைந்து!
சித்தம் கலங்கிச் சிதையச் செய்தாய்!
உயிராய் எந்தன் உதிரத்தில் கலந்தாய்!
தாயினும் மேலாய்த் தாங்கு வேனடி!
நீங்காதே எந்தன் நித்திலப் பெண்ணே.!

      காரைக்குடி கிருஷ்ணா

Wednesday, 21 March 2018

அன்னை என்பேனா
அன்புத் தோழன்
என்பேனா
கொஞ்சிப் பேசிடும்
குழவியும் நீயென்பேனா
உற்ற சோதரன் என்பேனா
அமுதத் தமிழில்
நான் வடிக்கும்
அழகுக் கவியென்பேனா
என்னவென்று
சொல்வேன் உன்
உன்னத உறவை
மயங்கி நிற்கிறேன் நானடா.

  காரைக்குடி கிருஷ்ணா

என் குறுங்கவிதையே
குறுகத் தறித்த
குறளும் நீயடா
கம்பன் எழுத மறந்த
காவியமும் நீயே
அன்பின் பிறப்பிடமே
பிள்ளைத் தமிழே
நானிருக்கிறேன்
என்ற ஒற்றை
வார்த்தையில்
உயிர் வாழ்கிறேன்
நானடா!

  காரைக்குடி கிருஷ்ணா

Saturday, 17 March 2018

வைகறை


நிலைமண்டில ஆசிரியப்பா: 
****-**************************                  வண்டினம் முரல வையகம் விழிக்க!
தண்ணொளி வீசிட தரணி செழிக்க!
ஆதவனும் இங்கே அழகாய்த் தோன்றி!
பேதங்க ளின்றி மண்ணுயிர் காத்திட!
இதமாய் வந்தான் இன்பம் கூட்டவே!

காரைக்குடி கிருஷ்ணா

விருத்தப்பா

கற்கண்டே கனியமுதே கற்றவர் போற்றும்
பைந்தமிழே பெண்ணினம் வியக்கும் பேரழகே
தென்திசை உதித்த தென்னவன் கொடியே
பெண்மகளே நீ வந்து பேசு

எங்கும் தமிழென முழங்கு

18 -02 -2018: தமின்னைத் தமிழ்ச் சங்கம்:
***------********* கவியரங்கக் கவிதை:
************************
தலைப்பு: எங்கும் தமிழென
முழங்கு:
*****************************
கலித்தாழிசை:
******************
அகத்தியன் தந்த அமுதத் தமிழே
செகத்தின் மூத்த செம்மை மொழியே
பொதுமறை கண்ட பொதிகைத் தமிழே
ஏதுனக்கு ஈடே, எட்டுத் திக்கும்
ஏறுநடை போடும் எந்தை மொழியே
வறுமை அறியா வஞ்சியும் நீயே
கன்னித் தமிழே கன்னல் மொழியே
மேன்மை கொண்ட மென்மைத் தமிழே
என்றும் புதிதாய் இனிமை நல்கும்
வன்திறல் கொண்ட வண்மொழி வாழியவே
எங்கும் உனது ஏற்றம் கொண்டு
ஓங்குக தமிழே என்றும் ஒளிர்க தமிழே!.

       காரைக்குடி கிருஷ்ணா

Thursday, 8 March 2018

தாயெனும் பெண்

தாயெனும் பெண்:
***********************
ஓடி யுழைத்து
உதிரம் தன்னை
உணவாக்கி
உயிர் சுமந்து
குலம் காக்கும்
உன்னதப் பிறவி

ஒருநொடி கூட
தனக்கென வாழா
தன்னிகர் இல்லா
தனிப் பிறவி

இடியென துன்பம்
வரினும்
இனிதே ஏற்கும்
இவள்
பிள்ளையின் சிற்றெரும்புக்
கடிக்கே
சிதறிப் போவாள்

மற்றவரின் துன்பத்தில்
தோள் கொடுக்கும்
இவள் தன்
இன்ப துன்பத்தை
வெளிக் காட்டா
ஆழ்கடல் அதிசயம்.  

    காரைக்குடி கிருஷ்ணா
         
(அனைத்துப் பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள் :)

Tuesday, 6 March 2018

சிரியாவில் குண்டு வீச்சு

படக்கவிதை
*************-*
மனிதனை மனிதன்
வேட்டையாடும் மனிதம்
மறந்த மனிதவிலங்கின்
கொடூர நிலைகண்டு
கற்களும் கண்ணீர்
சிந்தி கரைந்திடுமே.!

    காரைக்குடி கிருஷ்ணா