Saturday, 5 October 2019

ஹைக்கூ

தேனருந்த வண்டுகள்
வழி மாறிப் போகிறது
பெண்ணின் முகம்

    காரைக்குடி கிருஷ்ணா

ஒலிக்கட்டும் பறை

ஒலிக்கட்டும் பறை;
****--*---*************

ஒலிக்கட்டும் பறை
ஓங்கி ஒலிக்கட்டும் பெண்மை
பிள்ளைக்கறி கேட்கும்
பேயின் மகன்களை
பிய்த்து எறிந்திடவே
ஒலிக்கட்டும் பறை

பெண்மை வாழ்கவென்று
பெருமுழக்கம் செய்துவிட்டு
பேதமுடன் பார்க்கும்
நயவஞ்சகர் கூட்டத்தை
நையப் புடைத்திட
ஒலிக்கட்டும் பறை

பெண்ணைப் பொருளாய்ப்
போதையாய்ப் பார்க்கும்
நாயின் வாரிசுகளை
நறுக்கி எறிந்திட
ஒலிக்கட்டும் பறை

வழிகள் இருந்தும்
வாய்ப்புகள் நல்கா
வஞ்சகர் உலகை
வதம்செய் திடவே
ஒலிக்கட்டும் பறை

பெண்ணுக்கு ஒன்றென்றால்
பெருந்திரளாய்த் திரண்டு
பேருரு வெடுப்போம் என்றே
ஒலிக்கட்டும் பறை

பாலடிப்படையில் பாகுபாடில்லா
பாரினைப் படைத்திடவே
ஒலிக்கட்டும் பறை     
             காரைக்குடி கிருஷ்ணா

       (புகைப்பட. உதவி: ஒளியோவியர்: இரா. முத்துசாமி)

ஹைக்கூ

ஒரே இரவில் தெரிகிறது
பௌர்ணமியும் அமாவாசையும்
" வங்கிக் கணக்கு".

         காரைக்குடி கிருஷ்ணா

என் ஆசிரியர் நண்பர்கள் அனைவருக்கும் ஆசிரியர்தின நல்வாழ்த்துகள்;
**********************************

அன்று
என் கொள்ளுத் தாத்தனும்
கொள்ளுப் பாட்டியும்
கையெழுத்திடத் தெரியாததால்
இட்டனர் கைநாட்டு
இன்று நான்
பெற்றதோ
ஆய்வியல் நிறைஞர் பட்டம்
அலுவலகத்தில் இடுவதோ கைநாட்டு

       காரைக்குடி கிருஷ்ணா

   (புகைப்பட உதவி : ஒளியோவியர் : இரா. முத்துசாமி; நன்றி முத்து)

எத்தனை முகங்கள்?


எத்தனை எத்தனை
முகங்கள் மனிதருள்
இத்தரை மீதினில்
எண்ணில்அடங்கா
அன்பாய் அழகாய்
அரக்கராய் சிலமுகம்
அன்னையாய் ஆண்டவனாய்
அகிலத்தில் பலமுகம்
பொய்யராய்ப் புலையராய்ப்
பாரினில் பலவிதம்
இத்தனை மனிதரைக்
கடப்பது எங்ஙனம்
முகங்கள் அறிந்திடு
முகத்திரை கிழித்திடு
மனிதனாய் வாழ்ந்திடு
மன்பதை காத்திடு.

   காரைக்குடி கிருஷ்ணா

ஹைக்கூ

மயான பூமி
மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறது
பிணந்தின்னிக் கழுகுகள்.
       காரைக்குடி கிருஷ்ணா