கலைஞருக்கோர் கவிதாஞ்சலி:
********************
திருக்குவளை தந்த தீராச் சுடரே
கருவறையில் கன்னித்மிழ் கற்றே வந்தாயோ?
கழகச் சூரியனே காந்தத் தமிழே!
பழந்தமிழ் காத்த பண்பட்ட் பாவலரே!
வேதம் நிறைந்த வீரநாட்டில் நிந்தன்
பாதம் பார்த்துப் பழகி வந்தோம்!
செம்மொழி கண்ட செம்மாந்ததமிழே!
எம்மொழியும் நீயே ஏகாந்தத் தலைவரே!
பரணி கண்ட பைந்தமிழ்ப் புலவரே!
தரணியில் தமிழைத் தங்கமாக உயர்த்திட்டாய்!
திரையும் வணங்க திசையெட்டும் ஒலிக்க
கரைபுரளும் காவிரியிய் காவியமும் தந்திட்டாய்!
அஞ்சுகத்தாய் பெற்ற அஞ்சா நெஞ்சே!
நெஞ்சுக்கு நீதியாய்நின்ற நிகரிலாத் தலைவரே!
தொல்காப்பியப் பூங்காவும் தொன்தமிழ் உரைக்கும்!
நல்லுரை வள்ளுவம் நற்றமிழ் காத்திடும்!
குறளோவியம் தந்தாய் குமரிக்கோட்டமும் தந்தாய்!
மறவழித் தமிழா மறைந்தே போனாயோ?
சமத்துவபுரம் தந்த சமத்துவக் கோமானே!
எமனும் உம்மை ஏமாற்றிச் சென்றானோ?
பட்டிதொட்டி யெல்லாம் பவளத் தமிழால்
கட்டிப் போட்டீர் கழகச் சிங்கங்களை
பார்புகழும் பைந்தமிழ்ப் பகலவனும் நீயே!
கார்மேகமாய் விண்ணில் கரைந்து சென்றாயோ?
எத்திக்கும் உன்தமிழால் ஏகமாய் நிறைந்தாய் !
முத்தமிழ் வித்தகனே மூழ்கியே விட்டாயோ?
கலங்கரை விளக்கமாய் காலமும் காத்தாய்!
கலங்கி நிற்கிறோம் கனத்த இதயத்துடன்!
வங்கக் கடலோரம் வாஞ்சையுடன் நீயுறங்க"
பொங்கு தமிழும் புலம்பித் தீர்க்குதய்யா!
தன்னே ரில்லாத் தமிழினத் தலைவா!
இன்றே வாராயோ? இன்தமிழ் தாராயோ?
தமிழாய் மீள்வாய் தரணி ஆள்வாய்!
அமிழ்தே அழகே ஆழ்கடலே அமைதி கொள்வாய்!.
காரைக்குடி கிருஷ்ணா