அவனும் நானும் அமுதும் தேனும்:
***************************
கரிய நிறத்தன்
கன்னல் மொழியன்
ஆணழகன் அல்ல
ஆனால் தாய்மை
உள்ளம் கொண்டோன்
பிள்ளைச் சிரிப்பால்
எனைப் பித்தம்
கொள்ளச் செய்திடுவான்
கதை கதையாய்ப்
பேசிக் காலமதை
இன்பமாக்கிடுவான்
தேக்கு மரமல்ல
அவன் தேகம்
என் மனம்
தேடிச் சாயும்
அவன் தோள்கள்
அவன் அருகாமை
ஒன்றே என்ஆயுள்
நீட்டிக்கும் அருமருந்து
அவன் சுண்டுவிரல்
பட்டாலே என்சோகம்
யாவும் தீரும்
சில்லென்று வீசும்
சிறுதென்றலாய் அவன்
சிரிக்கும் பூக்களாய் நான்
அவனும் நானும்
அமுதும் தேனும்
தாலாட்டாய் அவன்
அவன் மடிதவழும்
குழந்தையாய் நான்
எதற்கும் அஞ்சா
ஆண்களிறு அன்னான்
என்மனவாட்டம் அறிந்தால்
நெஞ்சுடைந்து போவான்
செந்தமிழ் இலக்கியமாய்
அவன்
அதைச் சுவைக்கும்
வாசகியாய் நான்
வேய்ங்குழல் இசையாய்
அவன்
மீட்டும் வீணையாய் நான்
அவனும் நானும்
அமுதும் தேனும்
எனை மகிழ்விக்க
வேடிக்கை மொழி
பேசிடுவான்
ஒருநாளும் அவன்
துயரம் காட்டான்
அன்பாய் அரவணைக்கும்
அன்னையாய் சிலநேரம்
கொஞ்சிப் பேசும்
குழவியாய் சிலநேரம்
உதவும் சோதரனாய்
சிலநேரம்
தோள்கொடுக்கும்
தோழனாய் சிலநேரம்
என்னவென்பேன்
இவன் உன்னத உறவை
வானும் போற்றும்
வையமும் போற்றும்
எங்கள் தூய
தமிழ்க் காதலை
காரைக்குடி கிருஷ்ணா